அங்க அழகிரி அசிட் ஜாஸ்தியாகி டென்ஷனில் நகம் கடிச்சு கையே போயாச்சாம். சோனியாஜி இன்னிக்கு நாளைக்குன்னு பிரமானத்தை ஒத்தி போடறது நல்லால்ல. ஏதோ சட்டு புட்டுன்னு பதவி கொடுத்துட்டா, பிரச்சினை தீர்ந்துது பாருங்க, வந்தோமா நாலு காசு சம்பாரிச்சோமான்னு இல்லாம இதென்ன கொடுமைடா சாமி?!
அப்புறம் கனிமொழி பெண்ணே.......அழகிரியாய் பிறந்திருந்தால் அமைச்சரவை உனது கையில். கனிமொழியாய், பெண்ணாய் அல்லவோ பிறந்துவிட்டாய், ராசாத்தி மட்டும்தான் உனக்கு உதவி.
சரி திமுக வோட விட்டதா குழப்பம்? மம்தாவிற்கும் சிதம்பரத்திற்கும் அமைச்சரானவுடனே பெரிய தலைவலி. மக்கள் அதை கொண்டாடக்கூட விடமாட்டார்கள் போல. வியன்னாவில் சீக்கிய மதத்தலைவர் கொலை செய்யப்பட, இங்கே பஞ்சாப் பற்றி எரிகிறது. இனப்பற்றைவிட மதப்பற்று அதிகம் போல. இலட்ச கணக்கில் தமிழர்கள் இறந்து போனதன் சோகம் இதேபோல கோடிக்கணக்கில் பொருள் நாசம் செய்தால் மட்டுமே அரசின் கவனத்திற்கு வரும் போல் இருக்கிறது.
ஒருபக்கம் காந்தி சொன்ன அஹிம்ஸை வழி வந்த பாரத திருநாடு என்று சொல்லுவோம். ஆனா, மறுபக்கம் வன்முறை வெடித்தால் மட்டுமே கவனம் செலுத்துவோம். அரசு எவ்வழி, மக்களும் அவ்வழி...... கோடிக்கணக்கில் – கிட்டதட்ட ரூபாய் 7000 கோடியாம் - மதிப்புடைய அரசுப் பேருந்துகளும் புகைவண்டிகளும் தாக்கப்பட, நாளை புதிய பேருந்துகளுக்கும் புகைவண்டிகளுக்கும் தங்கள் வரிப்பணமே போகும் என்பதை நம்ப மக்கள் புரிஞ்சுக்க மாட்டாங்களே?
போராடுவோம் போராடுவோம்......... இன்னுயிர் தந்து இருப்பதை உடைத்து மதத்தின் சக்தியை ஊருக்குச் சொல்லுவோம்.வியன்னாவானால் என்ன விந்தியமானால் என்ன.
*****
அகதிகள் முகாமில் தகுந்த கழிப்பிடங்கள் கூட இல்லை என்று செய்திகள் வருகின்றன. ஆனால் இங்கே தமிழன்னை கோவில் இல்லை என்பதால் அந்த பாவமே தமிழர்களை ஏழேழு தலைமுறைக்கும் படுத்தும் என்று துயர் துடைத்து பரிகாரம் செய்ய வருகிறது தமிழன்னைக்கு கோவில். தங்கத்தில் ஓர் கோவில் இங்கே தமிழுக்கு ஒரு கோவில் யார் கேட்டார்கள்? நடமாடும் நம்பற்கொன்றீயில் படமாடும் பகவற்கு சென்று சேராதோ? ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பதெல்லாம் பழைய தேர்தல் கோஷங்கள். முதலில் அகதிகள் முகாமில் கழிப்பிடங்களும் அவர்கள் பிள்ளைகள் பள்ளி செல்ல வழியும் வாழ்க்கை வழிமுறையும் செய்ய வேண்டாமா?
கவலைப்படாதீர்கள், பதவி ஏற்பு முடிந்து பேரம் எல்லாம் படிந்த பின் தலைவர் வந்து பிரச்சினை தீர்ப்பார். மாற்று கட்சிகளும், தங்கள் பங்குக்கு தோல்விக்கு இயந்திரங்கள் காரணம், பணநாயகம் காரணம் என்று அறிக்கைகள் எல்லாம் அனுப்பி, பின் வந்து திட்டம் போடுவார்கள்.
எப்படியும் சட்டசபை தேர்தலுக்கு முன் ஈழப்பிரச்சினை திரும்ப வரும்.
*****
இந்த வார அவள் விகடனில் அநுத்தமா என்ற புகழ்பெற்ற எழுத்தாளாரின் செவ்வி வந்திருந்தது. நேர்த்தியும் நேர்மையும் என்றும் வெற்றி பெற்று தரும் என்ற அவர் கருத்து நன்றாக இருந்தது. ஆனால், அழகாக புள்ளி வைத்து கோலம் போட்டு கொண்டு வந்தவர், கடைசியில் வர்ணம் தீட்டும்போது கோலத்தை கலைப்பதுபோல், அடுத்து அவர் சொன்னது சுர்ரென்று கோபத்தை வரவழைத்தது. 60, மற்றும் 70களில் வாழ்ந்தவர்கள் வாழ்க்கையே பொற்காலம் என்றும், இப்போது நாமெல்லாம் பொருள் மோகம் கொண்டு, உறவின் மதிப்பறியாமல் வாழ்வதாக சொல்லி இருந்தது மகா அபத்தம்.
அதற்கு மேல் இன்னொரு கடுப்பு: சில தாய்மார்கள் 10 ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு போனால் கவலையாக இருப்பதாகவும் மணிக்கொருதரம் தொலைபேசுவதாக தங்கள் தாய்மையையும் தவிப்பையும் தெரியப்படுத்தி இருந்தார்கள். 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் ஒரு 15 வயதாவது ஆகி இருக்கும் என்றால், தனியாக இருக்க முடியாதா? அந்த அளவு கூட பொறுப்புணர்ச்சி வேண்டாமா என்றெல்லாம் கேட்டு நான் இப்போ, தாய்மார்கள் கோபத்தை பெற தயாராயில்லை.
ஆனா, குறைந்த பட்சம் ஒரு கேள்வி: ஒரு மணிக்கு போன் பேச வேண்டுமென்ற நினைப்பு இருந்து கொண்டிருந்தால் வேலையில் எப்படி கவனம் இருக்கும் ?
No comments:
Post a Comment